ஓபிஎஸ் வீட்டில் திடீர் மாற்றம்.. யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது.. எடப்பாடிக்கு மறைமுக மெசேஜ்? 1350791908


ஓபிஎஸ் வீட்டில் திடீர் மாற்றம்.. யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது.. எடப்பாடிக்கு மறைமுக மெசேஜ்?


 

சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்த பேனர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் இணைந்து இருந்த பேனர் அகற்றப்பட்டு, பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா மட்டும் இருக்கும் பேனர் ஒபிஎஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் கூறி ஒற்றைத் தலைமை கோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓ.பி.எஸ் மறைமுக மெசேஜ் சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

 

ஒற்றைத் தலைமை

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூகம்பமாக உருவெடுத்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்தது குறித்து வெளிப்படையாகத் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்புகள் எழுந்தன.

 

போஸ்டர் யுத்தம்

ஒற்றைத் தலைமை விவாதம் பொதுவெளியில் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மாற்றி மாற்றி ஒற்றைத் தலைமை பற்றி போஸ்டர் யுத்தம் நடத்தி வருவதால் கட்சிக்குள் பதற்றம் நிலவி வருகிறது.

 

ஒற்றைத் தலைமை வேண்டாம்

அதிமுகவில் இருந்து ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். பொதுச் செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான். அவர் இடத்திற்கு வேறு யாரும் வர முடியாது, பொது செயலாளராக வேறு யாரையும் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கான மரியாதை கட்சியில் காலாவதியானதாக அர்த்தம் என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார் ஓ.பன்னீர்செல்வம்.

 

பேனர் அகற்றம்

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் படமும் அகற்றப்பட்டுள்ளது. இருவரும் இருந்த பேனர் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இருக்கும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மறைமுக மெசேஜ்

ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒற்றைத் தலைமை குறித்து மாறி மாறி பேனர் வைத்து வரும் நிலையில், ஓ.பி.எஸ் வீட்டில் இருவரின் படங்களும் இருந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் கூறி ஒற்றைத் தலைமை கோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓ.பி.எஸ் மறைமுக மெசேஜ் சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Comments

Popular posts from this blog