பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தவருடமும் மாணவிகளிடம் தோற்ற மாணவர்கள்? முழு விவரம்....!18903375


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தவருடமும் மாணவிகளிடம் தோற்ற மாணவர்கள்? முழு விவரம்....!


தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9%  அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். 10ம் வகுப்பில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,12,620 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 85.8 % பேரும் மாணவிகளில் 94.4% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

886 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 242 சிறைக்கைதிகள் தேர்வு எழுதிய நிலையில்  அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் ஒருவர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 45 பேரும்,  கணிதத்தில் 2186 பேரும்,  அறிவியலில் 3841 பேரும் சமூக அறிவியலில் 1009 பேரும் சதம் அடித்துள்ளனர். மாவட்டம் வாரியாக கன்னியாகுமரியில் 97.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக வேலூரில்79.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

65 மாணவர்கள் 495 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று அசத்தியுள்ளனர். 564 பேர் 491-495 மதிப்பெண் வரையும், 1439 பேர்  486-490 மதிப்பெண் வரையும் பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த 2018ல் 94.5%, 2019ல் 95.2%, 2020 மற்றும் 2021ல் 100%(கொரோனா காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்) தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது 90.7 சதவீதமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

Comments

Popular posts from this blog